சிக்கி தவிக்கும் கிரிக்கெட் அவுஸ்ரேலியாவுக்கு ஷேன் வோர்ன் ஆலோசனை!

கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், கிரிக்கெட் அவுஸ்ரேலியாவுக்கு, அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வோர்ன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் பான்கிராப்ட்டின் தடைக்கு பிறகு, அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி கடும் சரிவை சந்தித்து வருகின்றது.
அத்தோடு, குறித்த மூன்று வீரர்கள் மீதான தடையை நீக்கி மீண்டும் அணிக்குள் உள்வாங்க அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், கிரிக்கெட் அவுஸ்ரேலியா சபையில் உள்ள முக்கிய அதிகாரிகள் பதவி விலகி வருகின்றனர்.
இதனால் அணியின் சரிவு மட்டுமல்லாமல், நிர்வாகத்திலும் குழப்ப தன்மை நீடித்து வருகின்றது. இந்நிலையில் இதற்கு ஜாம்பவானான ஷேன் வோர்ன், கிரிக்கெட் அவுஸ்ரேலியா சபையிடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் கூறியதாவது, ‘அவுஸ்ரேலியா கிரிக்கெட்டை தற்போதைய சிக்கலில் இருந்து மீட்க உதவ தயாராக உள்ளேன். அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களின் ஆலோசனையை பெறலாம். தற்போதைய அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் நிலைமை கவலை தருகிறது.
மெக்ரெத்தை பந்து வீச்சு பயிற்சியாளராகவும், மைக்கேல் கிளார்க்கை ஏன் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் நியமிக்கவில்லை. சிறந்த வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கு நாங்கள் உதவி புரிவோம்’ என கூறியுள்ளார்.
எனினும், ஷேன் வோர்னின் யோசனைகளுக்கு கிரிக்கெட் அவுஸ்ரேலியா சபை, செவி சாய்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.