சிங்களத் தலைவர்கள் முரண்படுவது அரசியல் தந்திரமே – சிவமோகன்
In இலங்கை September 4, 2019 5:38 am GMT 0 Comments 1329 by : Dhackshala
சிங்களத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவது அரசியல் தந்திரமே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.
அத்தோடு, இவ்வாறான குழப்ப நிலைகளை காரணம்காட்டி ஆட்சிக்கு வரும் அவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரே முடிவையே எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்பொழுது நாங்கள் அரசியல் அமைப்பினை சமர்ப்பித்தோமோ அப்பொழுதே தனது கட்சியை இரண்டாகப் பிரித்துவிட்டார்.
ஒரு பிரிவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்னும் பொய் பெயரில் அரசியல் அமைப்பிற்கு எதிராக இயங்க வைத்தார். மற்றைய பிரிவை அரசியல் அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுவது போல ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இயங்க வைத்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த அரசியல் அமைப்பு மாற்றத்தினை உருக்குலைக்கும் வேலையை கனகட்சிதமாக செய்து முடித்தார்.
ஏனெனில் இந்த அரசியல் அமைப்பு வெற்றிபெற்றால் தனக்கும் அதில் பங்குள்ளது என்று சிங்கள மக்கள் எண்ணிவிடக்கூடும். அதனால் சிங்கள மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவே இவர் அரசியல் அமைப்பை இல்லாமல் செய்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் புரட்சியை ஏற்படுத்தி சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதன் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதி என்னும் மதிப்பை இழந்த ஒருவராக நீதிமன்றினால் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தார் என்பதுதான் உண்மை.
ஒட்டு மொத்தத்தில் தமிழர்களின் வாக்குகளினால் தெரிவான மைத்திரிபால சிறிசேன, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவத்தினரை வைத்து காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு துரோகங்களை மாத்திரமே செய்துள்ளார்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.