சிதம்பரத்தை கைது செய்யும் தடை உத்தரவு நீடிப்பு!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏயார்செல் – மேக்சிஸ் முறைகேடு தொடர்பில் அமுலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் குறித்த இருவரையும் கைதுசெய்வதற்கான இடைக்காலத் தடை உத்தரவையே பட்டியாலா நீதிமன்றம் மேலும் நீடித்து இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானம் ஏயார்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடிக்கு முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு இலஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, கருப்பு பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமுலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமுலாக்கத் துறையினர் கடந்த ஆண்டில் முடக்கினர்.
இதனிடையே, இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமுலாக்கத் துறை கடந்த ஜூன் 13 இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனை கைது செய்வதற்கு இடைகால தடையை நீதிமன்றம் விதித்தது.
இத்தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.