சித்திரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்!

பல ஆண்டுகளாக சித்திரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கலிபோர்னியத் தம்பதியரின் குழந்தைகள் பெற்றோரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், தங்களின் தாயையும், தந்தையையும் இன்னும் நேசிப்பதாக டேவிட் மற்றும் லூயிசி டர்பின் ஆகியோரின் குழந்தைகள் கூறியுள்ளனர்.
2018ம் ஆண்டு வீட்டில் இருந்து 17 வயதான மகள் ஒருவர் தப்பியதன் பின்னர், இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்பது ஆண்டுகளாக தங்களின் 13 குழந்தைகளில் ஒருவரை தவிர ஏனையவரை மோசமாக நடத்தியதை இந்த தம்பதியர் ஒப்புக்கொண்டனர்.
நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணையில், தங்களின் நான்கு குழந்தைகள் அளித்த வாக்குமூலங்களை கேட்டபோது, இந்த தம்பதியர் அழுதனர்.
‘நான் எனது அப்பா, அம்மாவை பெரிதும் நேசிக்கிறேன்’ என்று ஒரு குழந்தை எழுதியதை அவரது சகோதரர் நீதிமன்றத்தில் வாசித்தார்.
‘எங்களை வளர்த்த முறை சிறந்தத்தாக இல்லாவிட்டாலும், இன்று நான் இருக்கின்ற மனிதராக உருவாகுவதற்கு இந்த முறை காரணமானதால், மகிழ்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.
அவரது மற்றொரு சகோதரர் தனது கொடுமையான அனுபவத்தால் பெரும் துன்பமடைந்ததாக தெரிவித்தார்.
‘வளரும்போது நான் அனுபவித்ததை என்னால் விவரிக்க முடியவில்லை. அது கடந்த காலம். இப்போது நிகழ்காலம். நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் எனக்கு செய்ததை நான் மன்னித்துவிட்டேன்’ என்று அவர் கூறினார்.
ஆனால், எல்லா குழந்தைகளும் இத்தகைய மனநிலையை பெற்றிருக்கவில்லை.
‘எனது பெற்றோர் எனது வாழ்க்கை முழுவதையும் வாழவிடவில்லை. ஆனால், இப்போது எனது வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன்’ என்று மகள் ஒருவர் கூறினார்.
தங்களின் குழந்தைகளை நடத்திய விதத்திற்காக மன்னிப்பு கோரிய இந்த தம்பதியர் நீதிமன்றத்தில் அழுதுவிட்டனர்.
‘வீட்டில் அடைத்து வைத்ததும், ஒழுக்கம் கற்பித்ததும் நல்ல நோக்கங்களையே கொண்டிருந்தன. எனது குழந்தைகளை காயப்படுத்த வேண்டுமென இதனை செய்யவில்லை. நான் எனது குழந்தைகளை நேசிக்கிறேன். எனது குழந்தைகளும் என்னை நேசிப்பதாக நம்புகிறேன்’ என்று 57 வயதான தந்தை எழுதியதை, அவரது வழக்கறிஞர் வாசித்தார்.
நீதிமன்றத்தில் பேசியபோது, தனது குழந்தைகளுக்கு செய்த செயல்களுக்காக தான் மிகவும் வருந்துவதாக லூயிசி டர்பின் கூறினார். இதனைத் தொடர்ந்து குறித்த தம்பதியினருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.