சினிமா துறையில் தன் வெற்றி குறித்து சமந்தா நெகிழ்ச்சி!

கௌதம் மேனன் இயக்கத்தில், ‘ஏமாய சேஷாவே’ படத்தில் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரமே தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள காரணமாக அமைந்ததென நடிகை சமந்தா கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து புதிய தெலுங்கு படமொன்றில் 70 வயது கிழவியாகவும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனது சினிமாத்துறையின் வளர்ச்சி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த சமந்தா மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய சமந்தா,
“நடிகர் – நடிகைகள் மீது எந்த கதாபாத்திரம் எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்று சொல்ல முடியாது. கதாபாத்திரங்களில் எளிதாக நடித்துவிடலாம் என்றும் நினைக்கக்கூடாது.
எனது நீண்ட சினிமா பயணத்தில் நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே எனக்கு முக்கியமானது. கதாபாத்திரத்தை புரிந்து அதுவாகவே மாறிவிடுவேன்.
கதாபாத்திரங்கள் மூலம் வாழ்க்கைக்கு சம்பந்தமான நல்லது கெட்டதை நெருங்கி பார்த்தேன். நிறைய விடயங்களை சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.
‘ஏ மாய சேஷாவே’ தெலுங்கு படத்தில் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. என்னையே அது மாற்றியது. ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் அதுதான் காரணமாக அமைந்தது.
அதன் பிறகு சமந்தா என்றால் வலுவான கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நினைக்க ஆரம்பித்தனர். நல்ல கதாபாத்திரங்கள் அமைய அந்த படம்தான் காரணம்.
அப்போதிருந்து ஒவ்வொரு படத்திலும் நிதானமாக யோசித்து முடிவுகள் எடுக்க கற்றுக்கொண்டேன். இந்த எச்சரிக்கை உணர்வு என்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திவிட்டது” என சமந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.