சிம்பாப்வே அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முக்கோண ரி-20 தொடர் தற்போது சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் சோலமன் மய்ர்ரின் 94 ஓட்டங்களின் துணையுடன் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களைக் குவித்தது.
இதனையடுத்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றியிலக்கை அடைந்தது. இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில், பாகர் சஹாமான் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 63 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள் அடங்களாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சிம்பாப்வே அணி வீரர் சோலமன் மய்ர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்வது உறுதியாகிவிட்டது. இறுதிப்போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளன. எனினும், அதன் வெற்றி, தோல்விகள் இறுதி போட்டியில் மோதும் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு தாக்கம் செலுத்தாது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் அவுஸ்ரேலியா முதலிடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 8 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவி சிம்பாப்வே அணி புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.