சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!
சிரியாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஈரானின் இலக்குகளை தொடர்ச்சியாக தாக்குவதற்கு ஆரம்பித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலதிகமாக எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் வௌியிடவில்லை.
நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதியின் உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து செலுத்தப்பட்ட ஒரு எறிகணையை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்தது.
இதேவேளையில், தமது நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக சிரியாவின் அரசு ஊடகமான சனா குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தியில், ”சிரியா பிராந்தியத்தில் ஈரானை சேர்ந்த குட்ஸ் படைகளின் இலக்குகளை தாக்க ஆரம்பித்துவிட்டோம்” என்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் சாட் நாட்டுக்கு சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
“சிரியாவில் மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஈரான் குழுவை இலக்காகக் கொள்ளவும், எங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் நாங்கள் கொள்கை வகுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
டமஸ்கஸில் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ட சில சாட்சிகள், இரவில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை முழுமையாக தகவல் வௌியிடப்படவில்லை.
இதுவரை சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மிகவும் அரிதாகவே இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.