சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!
சிரியாவில் வடமேற்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில் இட்லிப் மாகாணத்தில் மற்றொரு தாக்குதலிலும் பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
உயிரிழந்த 18 பேரில், 6 குழந்தைகள் உட்பட்ட 8 பேர் அடங்கிய குடும்பம் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படும் அதேவேளை, சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் கிளர்ச்சிப் படைகள் மனித உரிமைகளை மீறி வருவதாக ஐ. நா. தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.