சிரிய மண்ணிற்குள் ஒரு முள்ளிவாய்க்கால்
February 25, 2018 1:04 pm GMT
– சதீஸ் கிருஷணபிள்ளை –
ஒரு பூலோக நரகம். அங்கு வாழும் மக்கள் நீண்டகாலம் அனுபவிக்கும் சொல்லொணா துயரங்கள்.
ஒரு செழிப்பான பிரதேசத்தை நரகமாக்கிய சர்வதேச வல்லரசுகள், உலகப் பொது அமைப்பில் கஷ்டப்பட்டு கருத்தொற்றுமை கண்டுள்ளன.
அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சற்றேனும் ஆசுவாசம் அளிப்பது தமது நோக்கமென வல்லரசுகள் கூறுகின்றன.
நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சண்டைக்கு சற்று ஓய்வு கொடுக்குமாறு கோருகிறது.. ஆனால், தலைநகருக்கு அருகிலுள்ள கிழக்கு கவுட்டா பிரதேச மக்களின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அதன் முதன்மை நோக்கம்.
ஸ்ரெப்ரெனிக்கா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரையில் நீடித்த மனிதப் பேரவலங்கள். அவை உலக வல்லரசுகள் சுயநல அரசியலுக்காக பயன்படுத்திய விதம் மீண்டும் பாதுகாப்புச் சபையில் அரங்கேறியிருக்கிறது.
சிரியாவில் தொடர்ந்து 30 நாட்கள் போர் நிறுத்தத்தை அமுலாக்கக் கோரும் தீர்மானம். அதன் யதார்த்தங்கள் கசப்பானவை.
கிழக்கு கவுட்டா
டமஸ்கஸ் நகருக்கு அருகில் விவசாயத்திற்கு புகழ் பெற்ற பிராந்தியம். நகரமயமக்கலால் கொங்கிரீட் காடாக மாறியிருந்தது. இன்று குண்டுமழை பொழியப்படும் பிராந்தியமாக கிழக்கு கவுட்டா மாறியதென்றால், அதற்குக் காரணம் சிரியாவின் சிவில் யுத்தம்.
இந்தப் பிராந்தியத்தை சுற்றி வளைத்திருக்கும் அரச படைகள் ஒருபுறம். இதற்குள் இருந்து கொண்டு சண்டை புரியும் கிளர்ச்சிக் குழுக்கள்.
இங்கு 393,000 பேர் வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களில் 272,500 பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்பது ஐநாவின் மதிப்பீடு. சனத்தொகையில் மூன்றிலொரு பகுதி மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்.
இன்னொரு திறந்தவெளிச் சிறை
பொதுமககள் கிழக்கு கவுட்டாவிற்குள் பிரவேசிப்பதும் அங்கிருந்து வெளியேறிச் செல்வதும் சிரமமான காரியம்.
கிளர்ச்சிக்குழுக்களும், படைகளும் அனுமதித்தால் வாஃபிடீன் நுழைவாயிலைக் கடந்து செல்லலாம். ஆனால், கண்ணிவெடிகளின் அபாயத்தைத் தாண்ட வேண்டும். இருபுறமும் பறந்து செல்லும் துப்பாக்கி ரவைகளில் இருந்தும் தப்பிப்பது அவசியம்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் இதுவரை 520 பேர் வரை பலியாகி 2,500 பேர் வரை காயமானதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
சிரியாவின் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் தேவைக்கு ஏற்ப புள்ளிவிபரங்கள் மாறும். அரச படைகளின் விமானத் தாக்குதலால் அதிக மரணங்கள் சம்பவித்ததாக அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் சாடும். சிரிய அரசாங்கத்திற்கு படைப்பலத்தை வழங்கி ஆதரவு தரும் ரஷ்யா முதலான தரப்புக்களோ, கிளர்ச்சியாளர்களே பொதுமக்களைக் கொல்வதாகக் கூறும்.
இந்த சண்டையில் காயமடைந்தவர்கள் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படுவார்கள். கவுட்டாவில் இருந்து நோயாளிகளின் போர்வையில் கிளர்ச்சியாளர்களும் வெளியேறக் கூடும் என்பதால், அரசாங்கம் காயமடைந்தவர்களை ஏற்காது. கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளவர்களை விடுதலை செய்தால் மாத்திரமே நோயாளிகளை ஏற்கலாம் என்று நிபந்தனை விதிக்கும். மறுபுறத்தில், குவெட்டோவில் வசிக்கும் ஒவ்வொருவரும் கிளர்ச்சியாளர்களின் உத்தரவின்றி அணுவளவும் அசைய முடியாது. இங்கிருந்து யார் வெளியேறலாம் என்பதைத் தீர்மானிப்பவர்களும் கிளர்ச்சியாளர்களே.
மனிதாபிமான நெருக்கடி
கவுட்டாவின் நிலைமை மோசமானதாக இருப்பதற்கு அரச படைகளின் ஷெல் தாக்குதல்கள், கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், ஆயுதம் தாங்கிய அமைப்புக்களின் அராஜகம் ஆகிய மூன்று காரணங்கள்.
பட்டினியால் வாழும் மக்களுக்கு உணவையும், நோயாளிகளுக்கு மருந்தையும் அனுப்பி வைப்பதில் கட்டுப்பாடுகள். மனிதாபிமான அமைப்புக்கள் வாஃபிடீன் நுழைவாயிலுக்கு ஊடாக பொருட்களை அனுப்பி வைத்தாலும், அங்கு காவல் காக்கும் கிளர்ச்சியாளர்கள் பறித்துக் கொள்வார்கள். எஞ்சியது மாத்திரமே மக்களுக்கு கிடைக்கும். யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களே தீர்மானிப்பர்.
வெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் மீது கட்டுப்பாடு. இதனைத் தாண்டி வரும் பொருட்களும் அராஜகம் புரியும் ஆயுதக்குழுக்களின் கைகளில் என்ற நிலைமை. இதன் காரணமாக, உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. ஒரு இறாத்தல் பாணின் விலை டமஸ்கஸ் நகரில் 94 பவுண்களாக இருக்கையில், குவெட்டாவில் விலை 1,500 பவுண்கள்.
கிழக்கு கவுட்டாவின் கிளர்ச்சிக் குழுக்கள்
ஒரு ஆட்சியாளரை தூக்கியெறிவதற்காக வல்லரசொன்று வலிந்து திணித்த யுத்தம். அதன் சகல விளைவுகளும் சிரியாவிலும் விளைந்தன.
என்ன நோக்கம், எத்தகைய போராட்டம், எது இலட்சியத்தை அடையும் வழிவகை என்பது தெரியாமல் ஆயுதமேந்தி, யாருடன் சேர்வது என்று தெரியாமல், சண்டை பிடிக்கும் கிளர்ச்சிக் குழுக்கள். சிரியாவைப் பொறுத்தவரையில், எந்தெந்தக் குழுக்கள் எத்தகைய சார்புநிலைகளைக் கொண்டுள்ளன என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
கடவுட்டாவிலும் இரு பிரதான கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளன. வடபகுதியில் இஸ்லாமிய இராணுவம் என்ற குழு. தென்மேற்குப் பிராந்தியத்தில், ஃபைலால் அல்-ரஹ்மான் என்ற மற்றொரு குழு. இதைத் தவிர சிறு குழுக்களும் உள்ளன. இந்தக் குழுக்களுக்கு இடையிலான உட்பூசலில் ஒருவருக்கு சார்பானவரை மற்றைய குழு அழிப்பதும், ஒரு குழுவிற்கு எதிரானவர்களை மற்றைய குழு போஷித்து வளர்ப்பதும் உண்டு. இதுவொரு சிக்கலான வலைப்பின்னல். இதனை புரிந்து கொள்வது கடினம்.
சர்வதேச அரசியலின் அடிப்படையில் ஆராய்ந்தால், ஒவ்வொரு வல்லரசும் ஒவ்வொரு குழுவை போஷித்து வளர்த்திருப்பதைக் காணலாம்.
பஷார் அல் அசாத்தை ஆட்சிபீடத்தில் இருந்து தூக்கியெறியும் முயற்சிகளுக்காக அமெரிக்காவின் ரகசிய உதவியுடன் உருவாக்கப்பட்டதே ஐஎஸ் இயக்கம் என்பது யாவரும் அறிந்த உண்மை.
ரஷ்யாவிற்கு அல்-நுஸ்ரா என்ற அமைப்பைப் பிடிக்காது. அந்த இயக்கம் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் என்று பெயரை மாற்றிக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு கிழக்கு கவுட்டாவில் இயங்கும் ஃபைலால் அல்-ரஹ்மான் ஆயுதக்குழுவின் ஆதரவு உண்டு. எனவே, அல்-ரஹ்மான் குழுவை அழித்தொழிக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் ஆதங்கம்.
பாதுகாப்புச் சபையில் இழுபறி
ஒட்டுமொத்த உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த கவுட்டா மனிதப் பேரவலத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஐநா பாதுகாப்புச் சபை கூடியது. அந்தக் கூட்டத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை எட்டுவதில், உலக நாடுகள் மத்தியில் இழுபறி. சிரிய மண்ணில் ஐஎஸ் இயக்கம் தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில், அமெரிக்கா கட்டுப்பாடற்ற யுத்த நிறுத்தம் பற்றி பேசியது. ஆனால், அல்-ரஹ்மான் முதலான குழுக்கள் போர் நிறுத்த உடன்படிக்கைக்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்று ரஷ்யா வாதிட்டது.
இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள் தீர்மானம் மீதான விவாதங்கள் மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. பாதுகாப்புச் சபை நாடுகளும் பிளவுபட்டு நின்றன. சிறு திருத்தங்களின் பின்னா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் அமுலாக்கப்பட்டதாகக் கூறினாலும் குண்டுகளுக்கு ஓய்வில்லை.
அடுத்து என்ன?
போர் நிறுத்தத்தின் நோக்கம் கவுட்டாவை சொர்க்காபுரியாக மாற்றுவது அல்ல. அங்கு நிலவும் மனிதப் பேரவலத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைப்பது தான்.
முன்னைய சமாதான முயற்சிகளின் வாயிலாக அங்கிருந்து கிளர்ச்சியாளர்களை வேறு இடங்களில் அனுப்பி வைக்கும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டது. இந்த முயற்சிகளில் கிளர்ச்சிக் குழுக்கள் நிபந்தனை விதித்தன. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி கண்டது.
இன்று சிரியா முழுவதற்கும் அமுலாகும் வகையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பிரதான கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளடக்கப்படவில்லை.
அந்தக் கிளர்ச்சிக் குழுக்கள் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம். அத்தகைய எந்தவொரு தாக்குதலும் அடுத்தடுத்த பதில் தாக்குதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தளம்பலான நிலவரமே கிழக்கு கவுட்டாவில் உள்ளது.
மொத்தத்தில் பார்த்தால், கவுட்டா மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் அரசியல் தீர்வு சிரியாவிடம் கிடையாது. சுயநலன் கருதி செயற்படும் வல்லரசுகள் மக்கள் சார்பான தீர்வுகளை எட்டப் போவதில்லை. அத்தகைய தீர்வுத் திட்டத்திற்கு ஐநாவின் சிக்கலான கட்டமைப்பிற்குள் இடமும் கிடையாது. கவுட்டா மக்களின் நிலை பரிதாபகரமானது என்பதைத் தவிர, இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
-
அமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..?
-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...
-
முதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்
உலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...