சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரராக செடியோ மானே தெரிவு!
In உதைப்பந்தாட்டம் January 9, 2020 5:39 am GMT 0 Comments 1597 by : Anojkiyan

ஆண்டின் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரருக்கான விருதை செனகல் கால்பந்து அணியின் முன்கள வீரர் செடியோ மானே, முதல்முறையாக வென்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்தவருக்கு சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கும் நிகழ்வு ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தால் எகிப்தின் ஹுர்கடா நகரில் நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்விலேயே 27 வயதான செடியோ மானேவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
செனகல் அணியின் நட்சத்திர வீரரான செடியோ மானே, இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழக அணியான லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது பங்களிப்புடன் லிவர்பூல் அணி, 2018-19 யூரோ சம்பியன்ஸ் லீக், சம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட நான்கு சம்பியன் பட்டங்களை வென்றது.
அத்தோடு, செடியோ மானே, கடந்த சீசனில், 61 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார். மேலும் 12 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். இதற்கமையவே அவருக்கு இந்த விருது வழங்;கப்பட்டுள்ளது.
செடியோ மானேவிற்கு கடும் போட்டியாளராக திகழ்ந்த லிவர்பூல் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் மொஹமட் சாலா, 55 போட்டிகளில் விளையாடி 26 கோல்களை அடித்துள்ளார். மேலும் 10 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார்.
மொஹமட் சாலா, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஆண்டின் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீராங்கனையாக நைஜீரியாவின் அசிசத் ஓஷோலா நான்காவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.