சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ தலைமைகள் வழிசெய்ய வேண்டும்: மன்சூர்
எதிர்கால சமூகத்தினர் நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை சிறுபான்மை மக்களின் தலைமைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் கவிதாயினி யுகதாரனி செசிலியா சோமசுந்தரத்தின் ‘கரையைத்தேடு’ நூல் வெளியீட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சிறுபான்மை மக்களின் தலைமைகள் என்ற அடிப்படையில் எதிர்கால சமூகத்திற்கு விட்டுச்செல்கின்ற சொத்து கல்வி மாத்திரமல்ல அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உறுதிசெய்வதும் இன்றைய தேவையாக உள்ளது.
இதனை சரியாக உள்வாங்கி தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது அரசியலை செய்யவேண்டிய அவசியம் இருக்கின்றது. எந்த ஒரு இனரீதியான அரசியலையும் மக்கள் விரும்பவில்லை.
இந்துக்களில்லாத பிரதேசத்தில் கோவில்களுக்கு தேவைகிடையாது. முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் பள்ளிவாசல்களுக்கான தேவையில்லை. அதேபோன்று சிங்கள மக்கள் வாழாத இடத்தில் விகாரைகளின் அவசியமும் இல்லை.
இதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண சபையல் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் முஸ்லிங்கள் வாகரையில் பள்ளிவாசல் அமைப்பதற்கு கேட்டுக்கொண்ட போது முஸ்லிங்கள் வாழாத வாகரையில் பள்ளிவாசலின் அவசியம் இல்லையென தடுத்து நிறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.