சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது.
சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை, புலோலி-சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயாரும், தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.
கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.