சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன்
In இந்தியா October 28, 2018 3:15 am GMT 0 Comments 1648 by : Yuganthini
சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்
ஆகவே மஹிந்தவின் சட்டவிரோத பிரதமர் நியமனத்தை இரத்து செய்வதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் முதன்மை குற்றவாளியாக மஹிந்தவை தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அடையாளப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை இன்னும் நிறைவு பெறாத நிலையில் மஹிந்தவை பிரதமராக நியமித்திருப்பது இலங்கை சட்டங்களுக்கு மட்டுமின்றி சர்வதேச நியதிகளுக்கும் எதிரானதாகும்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.