சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு!

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் ஒரு சுரங்கத்தில் சிக்கி இருபத்தி மூன்று பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வ சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாங்சுவான் மாவட்டத்தில், முன்னர் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து இயந்திரங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்போது அங்கு அளவுக்கதிமாக கரியமில வாயு கசிந்ததால் நிலத்தடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 13பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டையோஷுய்டோங் நிலக்கரி சுரங்கத்தில் அதிகப்படியான கார்பன் மோனாக்சைட் வாயுவால் நிலத்தடியில் சிக்கிய 24பேரில் இறந்தவர்களும் அடங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 மணி நேரத்திற்கும் மேலான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் தப்பிய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
அவசரநிலை மேலாண்மை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ‘நிலக்கரிச் சுரங்கங்களில் பெரிய விபத்துக்கள் நிகழாமல் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சீனா உள்ளூர் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
அனைத்து நிலக்கரி சுரங்கங்களிலும் விரிவான பாதுகாப்பான உற்பத்தி சோதனையைத் தொடங்கவும், காலாவதியான உற்பத்தி திறனை ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் அகற்றவும் மாநில சபையின் அதிகாரிகள் சோங்கிங் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.