சீயோன் தேவாலய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திவேண்டி அஞ்சலி
In இலங்கை April 29, 2019 6:28 am GMT 0 Comments 2469 by : Yuganthini
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திவேண்டி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று, எட்டாவது தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக அனைத்து பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.காந்தராஜா தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பிரதேசசபை தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைக்கு முன்பாக தீபங்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தற்கொலை தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கான அஞ்சலி உரைகள் நடைபெற்றதுடன் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சிதினால் குறித்த தாக்தலுக்கு இரங்கல் செலுத்தும் கவிதையொன்றும் வாசிக்கப்பட்டது.
இதேவேளை, ‘உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்காக’ என்னும் தலைப்பில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் பிறிதொரு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ,எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொன் உட்பட இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்கள், இளைஞர்கள், மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பேருரைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் தீபம் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.