சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்
In இலங்கை January 11, 2021 3:14 am GMT 0 Comments 1460 by : Dhackshala

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பாதுகாப்புடன் பாடசாலைகள் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் 2-13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கையானது முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேநேரம், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பாடசாலைகளில் இம்மாதம் 25ஆம் திகதி முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னதாக கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போதும் பாடசாலைகளில் இருக்கும்போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்தும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்குமானால் இடைவெளியை பேணும் சந்தர்ப்பங்களில் அதனை அகற்ற முடியும் என்றும் பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போதும் அனைத்து மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதாக வகுப்பு மட்டத்தில் ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தமது வீடுகளிலிருந்து எடுத்து வரும் உணவு, குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிமாற்றிக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர இடைவெளியை பேணி, உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பிள்ளைகளின் மனநல சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அவசியம் குறித்தும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.