சுன்னாகம் கொலை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
In இலங்கை April 29, 2019 5:06 pm GMT 0 Comments 2830 by : Jeyachandran Vithushan

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற சந்தேகநபரைத் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதை செய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இதன்போது எதிரிகள் ஐந்து பேரையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.
இதன்போது இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை வரும் ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
திசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிஷாந்த பிரியபண்டார, ராஜபக்ஷ முதியன்சலாகே சஞ்ஜீவ ராஜபக்ஷ, கோன்கலகே ஜயந்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அநுராதபுரம் சிறைச்சாலையில் அனுபவித்து வருகின்றனர்.
சிறிஸ்கந்தராஜா சுமணனை வதைத்து கொலைசெய்தமைக்காக, மேற்குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி உட்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.