சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு – மன்னாரில் மாவீரர் தின தடை உத்தரவு நீடிப்பு!
In இலங்கை November 23, 2020 6:28 am GMT 0 Comments 1455 by : Jeyachandran Vithushan

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வழக்கு விசாரணைகளுக்காக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்துள்ளார்.
எனினும் குறித்த தடை உத்தரவை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.
எனினும், நீதிமன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லாத நிலையிலும், சுகாதார நடை முறைகளைப்பின்பற்றி சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் குறித்த நினைவேந்தலை முன்னெடுப்போம் என மன்றில் குறிப்பிட்டபோதிலும் மன்னார் நீதவான் குறித்த தடை உத்தரவை நீக்க மறுத்துள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தினால் குறித்த நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஆபத்தான நிலமையில் இருக்கின்றது.
இந்நிலையில், மக்கள் ஒன்று கூடினால் குறித்த தொற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையினாலும் ஏற்கனவே பொலிஸார் ஊடாக வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் நீதவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.