சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க அருகதை கிடையாது- பத்மநாதன் கருணாவதி
In இலங்கை December 21, 2020 6:36 am GMT 0 Comments 1511 by : Yuganthini
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பத்மநாதன் கருணாவதி மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் கூட்டமைப்பினர், இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றி, ஐ.நாவில் கொலையாளிகளை நீதிபதிகளாக சித்தரித்து உள்ளக விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கி அதற்கான கால அவகாசத்தை கொடுத்து முற்று முழுதாக பேரினவாத அரசை பாதுகாத்தது யாவரும் அறிந்ததே.
தற்போது இதே கூட்டமைப்பு, கோட்டா அரசை பாதுகாக்கும் நோக்குடன் மீண்டும் காலக்கெடு எனும் வாசகத்துடன் உயர் மட்ட தலைவர்களை சந்தித்துள்ளனர்.
மேலும், கடந்த தேர்தலில் சர்வதேச விசாரணையை வலியுறுத்த கூடிய இரண்டு பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்துள்ளனர்
சர்வதேச அரங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கூட்டமைப்பு எந்த ஒரு தீர்மானமும் எடுக்க நாம் சம்மதிக்கப்போவது இல்லை. அவ்வாறு கூட்டமைப்பு, ஜெனிவாக்கு முண்டி அடித்துக்கொண்டு செல்வதாக இருந்தால் நாம் கடும் நடவடிக்கையை சர்வதேச அளவில் எடுப்போம்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது.
அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மைக் காட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைப்பாடு, தற்பொழுது மக்கள் மற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் மூலமாக உடைக்கப்பட்டு இருக்கின்றது.
இனிமேல் தமிழ் மக்கள் சார்பில் முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என்கின்ற நிதர்சனத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.