பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை
In இந்தியா June 17, 2019 3:49 am GMT 0 Comments 1585 by : Yuganthini
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 50 பேர் தொடர்பான விவரங்களை இந்தியாவுக்கு வழங்க சுவிட்சர்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு பணத்தை பதுக்கி பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்களை இதனூடாக இனங்காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தனவந்தர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வருகின்றனர்.
இவர்களை பற்றிய விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு பாதுகாத்து வருவதால், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொர்க்கபுரியாக சுவிட்சர்லாந்து விளங்கி வருகிறது.
அத்தகைய சுவிஸ் வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் பலரும் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை சேமித்துள்ளனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக விளங்கி வருகிறது. அந்த பணத்தை மீட்டு கொண்டு வருவதும் சிரமமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில், முன்னைய பாரதீய ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியோர் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்ததுடன், அவர்களின் விவரங்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்படி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக சுவிட்சர்லாந்து அரசு இணக்கப்பாட்டிற்கு வந்தது. தனது நாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. பின்னர் இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்கும் நடவடிக்கையில் அந்த நாடு இறங்கியுள்ளது. அங்கு பணம் பதுக்கியிருக்கும் சுமார் 50 பேரின் விவரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பண வைப்பாளர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் அறிவித்தல்களை அனுப்பியது.
அப்போது, தங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதற்கு போதுமான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அவற்றை சுவிட்சர்லாந்து அரசு தள்ளுபடி செய்து விட்டது. எனவே அந்த 50 பேர் பற்றிய விவரங்கள் விரைவில் இந்தியாவுக்கு கிடைக்குதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 50 தனிநபர்களும், போலி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் என கூறப்படுகிறது.
குறிப்பாக காணி பங்கிடல் முகவர்கள், நிதிசேவை, தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு, வீடு அலங்காரம், புடைவை கடைகள், பொறியியல் பொருட்கள், ஆபரண கற்கள் மற்றும் நகைத் தொழில் துறைகளை சேர்ந்த வியாபாரிகள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.