சூர்யகுமார் யாதவ் தரமான வீரர்: ஆஸி தொடரில் இடம்பெறாதது குறித்து லாரா வருத்தம்!

சிறந்த மத்தியதர வரிசை வீரரான சூர்யகுமார் யாதவ், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் இடம்பெறாதது வருத்தமளிக்கின்றது என மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்வாகவில்லை.
இதுகுறித்து விளையாட்டு ஊடகமொன்றுக்கு ஜாம்பவான் பிரையன் லாரா கருத்து தெரிவிக்கையில், ‘சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். ஓட்டங்களை குவிப்பதை வைத்து வீரர்களை நான் பார்க்க மாட்டேன். அவர்களது துடுப்பாட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் பார்ப்பேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான துடுப்பாட்டத்தை அளித்தார்.
ரோஹித் சர்மா, குயின்டன் டி கொக்குக்கு அடுத்தபடியாக அவர் நெருக்கடியான நிலையில் களம் இறங்குகிறார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் மூன்றாவது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராகவும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார்.
என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். அவுஸ்ரேலிய தொடருக்கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை’ என கூறினார்.
சூர்யகுமார் யாதவ், ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 4 அரைசதங்களுடன் 480 ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.