சூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
In இலங்கை November 23, 2020 9:49 am GMT 0 Comments 2336 by : Dhackshala

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம் உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.
இது தற்போது வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வடகிழக்கு கரையோகத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை, சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழையும் பெய்யக்கூடும்.
இதுமட்டுமல்லாமல் நாட்டின் எனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் காற்றானது சில பிரதேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோமீற்றல் வரையான வேகத்தில் வீசும்.
எனவே இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் அத்தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்துகின்றோம்.
தாழமுக்கம் காரணமாக புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னால் வரையான கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும்.
காற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலே மீற்றர் வரை அதிகரித்து காணப்படும். அவ்வாறான வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே பொது மக்களும் கடற்றொழில் சார்பானவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது திருகோணமலையில் இருந்து 425 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். 24 மணிநேரத்தில் சூறாவளியாக மாறி வடமேற்காக நகரவுள்ளது.
இதனால் ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.