சோதனைகளின் மூலம் ஐ.எஸ். அமைப்பை அழிக்க முடியாது -பொன்சேகா
In ஆசிரியர் தெரிவு May 3, 2019 7:08 am GMT 0 Comments 3034 by : Dhackshala
தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் மூலம் இலங்கையினுள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழிக்க முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) பயணம் மேற்கொண்டிருந்த சரத் பொன்சேகா, இறைவழிபாட்டின் பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலானது நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டதாகவே இருக்கவேண்டும்.
குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இந்த விடயத்தில் பலிக்கடா ஆக்களாக்கப்பட்டுள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் மூலம் இலங்கையினுள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழிக்க முடியாது. முறையான திட்டமிடல் இல்லாவிட்டால் இரண்டு வருடங்கள் ஆனாலும் இந்த பயங்கரவாதத்தை அழிக்க முடியாது.
இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பிருக்கின்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அடிப்படைவாத அமைப்புடன் கோட்டாபயவுக்கு தொடர்பிருக்கும் என நான் நம்பவில்லை” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.