சோமாலியாவிலிருந்து அனைத்து துருப்புகளையும் மீள அழைக்க ட்ரம்ப் உத்தரவு!

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சோமாலியாவில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் மீள பெற்றுக்கொள்ளும்படி அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் ஆபிரிக்காவுக்கான அமெரிக்க படை தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையில் மாற்றமில்லை. நம்முடைய சொந்த நிலத்தில் அச்சுறுத்தலாக இருக்கும், வன்முறை ஏற்படுத்த கூடிய பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து நாம் செயலிழக்க செய்வோம்.
சொந்த நிலத்திற்கு அச்சுறுத்தலுக்கான அடையாளங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இருப்பது தெரியவருமெனில், சோமாலியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தகுதியை அமெரிக்கா திரும்ப பெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சமீபகாலமாக வெளிநாடுகளில் உள்ள தங்களது படைகளை சொந்த நாட்டுக்கே அழைத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரண்டாயிரத்து 200 அமெரிக்க துருப்புக்களை திரும்பபெற, அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகன் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையின் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மூவாயிரமாக குறைந்தது.
ஈராக்கில் செயற்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏழாயிரத்து 500 படை வீரர்கள் உள்ளனர். அதில் ஐந்தாயிரத்து 200பேர் அமெரிக்க வீரர்கள் ஆவர்.
இதேபோல, முன்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை நான்காயிரமாக குறைக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.