ஜனநாயக அரசியல் குறிக்கோளை நாம் இன்னும் சாதிக்கவில்லை: ந.சிறீகாந்தா
In ஆசிரியர் தெரிவு May 7, 2019 8:14 am GMT 0 Comments 2499 by : Yuganthini
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் ஓர் சுயாட்சி அரசினை ஏற்படுத்த வேண்டுமென்ற எங்கள் ஜனநாயக அரசியல் குறிக்கோளை நாம் இன்னும் சாதிக்கவில்லையென ரெலோ அமைப்பின் செயலாளா் நாயகம் ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) கோண்டாவிலில் நடைபெற்ற ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ந.சிறீகாந்தா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நடந்து முடிந்த போரின் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன சூழ்நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதம் முழு இலங்கைத் தீவுக்கும் விடுத்திருக்கும் சவாலை நாட்டின் ஏனைய சமூகங்களைப் போலவே தமிழ் இனமும் எதிர்க்கின்றது.
அந்தவகையில் தமிழ் மக்களைப் போலவே தமிழைத் தாய் மொழியாக கொண்ட முஸ்லிம் மக்களும் இலங்கைத் தீவில் ஓர் சிறுபான்மை இனமேயாகும்.
ஆகையால் ஒருசில அடிப்படை மதவாதிகள் மற்றும் மத வெறியர்கள், தங்களின் அராஜக செயற்பாடுகளுக்கு முஸ்லிம் மக்களை பலியாக்க கூடாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் முறியடிக்கப்பட்டு முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இலங்கைத் தீவில் இடமில்லை.
அதேநேரத்தில் சட்டத்தை மதிக்கும் அமைதியை விரும்பும் முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முழு நாட்டினதும் பொறுப்பு என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
ஆகையால் பாரிய தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதில் இனியும் காலதாமதம் இருக்கக்கூடாது” என ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.