‘ஜனபலய’வை எதிர்கொள்ள தயார்! – அரசாங்கம்
மஹிந்த ஆதரவு பொது எதிரணியினரால் முன்னெடுக்கப்படவுள்ள ஜனபலய என்ற பேரணியை எதிர்கொள்ள அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட்டுள்ள போதும், அது மக்களை பாதிக்குமாக அமைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில், தலைநகர் கொழும்பின் பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, 5000இற்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே மேலதிக பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
பேரணி கொழும்பை வந்தடையும் பிரதான இடங்களான கொழும்பு கோட்டை, லிப்டன் சுற்றுவட்டம், கொள்ளுபிட்டி சந்தி ஆகிய பகுதிகளில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் நுழையும் மற்றும் வெளிச்செல்லும் பிரதான பாதைகளான காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி மற்றும் பத்தரமுல்ல வீதி என்பன விசேடமாக கண்காணிக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் தண்ணீர் தாங்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் கலகத்தடுப்பு பொலிஸார் ஆகியோரும் ஆயத்த நிலையில் உள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் இந்த பேரணியில் சுமார் 5 இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என பொது எதிரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.