ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புதிய வழிகாட்டுதல்கள்….!
In இலங்கை December 1, 2020 4:32 am GMT 0 Comments 1416 by : Jeyachandran Vithushan
நாட்டில் சுற்றுலாத் துறையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி சுகாதார அமைச்சின் COVID-19 மருத்துவ மேலாண்மை நிபுணர் குழு சுற்றுலாத் துறையுடன் இணைந்து அதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் சர்வதேச பயணிகளுக்காக இரு விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க பரிந்துரைத்துள்ளதாக இலங்கை சுற்றுலாத் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுக்கான குறித்த வழிகாட்டுதல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சாதகமான பதிலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நெறிமுறை சுகாதார அமைச்சினால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அந்தவகையில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களுக்கு முன்பதிவு செய்யதல் அல்லது பணம் செலுத்ததுபவர்களுக்கு மட்டுமே விசா வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லெவல் 1 தங்குமிடத்தில், சுற்றுலாப் பயணிகள் வளாகத்திற்குள் தங்கவும், குறிப்பிட்ட விருந்தினர், குடும்பம் அல்லது குழுவினருக்காக பிரத்தியேகமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் கே.பி.எம்.ஜி. சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடமாக இருக்கும் லெவல் 2 விடுதிகளில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்,
மேலும் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளங்களைப் பார்வையிடவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தளங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி திணைக்களத்தின் இணையதளத்தில் கிடைக்கும். 28 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களை இலவசமாக பதிவுசெய்ய முடியும்.
அத்தோடு நீண்ட கால பயணிகள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லது இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், சுற்றுலா மற்றும் விளையாட்டு சுற்றுலா விசா வகைகள் என்பன வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்படும்.
மேலும் தற்போது ஒரு மாதத்திற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும், மறு அறிவித்தல் வரும்வரை ஒன் அரைவல் விசாக்களை வழங்குவது இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழிகாட்டுதல்களில் அனைத்து பயணிகளும் ஒரு உள்ளூர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு விசா விண்ணப்ப செயற்பாட்டின் போது ஒன்லைனில் கட்டாய COVID-19 காப்பீட்டைப் பெற வேண்டும்.
ஏனெனில் இலங்கையில் தங்கியிருக்கும் போது எந்தவொரு உடல்நலம் தொடர்பான செலவுகளையும் அரசாங்கம் ஏற்காது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் என்பன ஊடக போக்குவரத்து மேற்கொள்ளப்படும்.
சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கருத்திற்கொண்டு ஒரு நாளைக்கு மொத்தம் 300 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை விமான நிலையத்திற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கட்டாய பி.சி.ஆர் சோதனை அறிக்கை அவசியம்.
நாட்டை வந்தடைந்தவுடன் அன்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை சுகாதார அமைச்சு அல்லது தனியார் மருத்துவமனைகளால் விமான நிலையத்தில் நடத்தப்படும்.
மேலும் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்
அத்தோடு விமான நிலையத்திலிருந்து சான்றளிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு பயணிக்கும் பொறுப்பு சான்றளிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது பயண முகவரால் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.