ஜனாதிபதியின் உத்தரவு: கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சந்திர ஜெயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.டபிள்யூ.டி.சி.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, நேற்று (புதன்கிழமை) குறித்த நியமனங்களை வழங்கிவைத்தார்.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தொடர்பாக அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் குறித்த ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட்டதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கடந்த வாரம் மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன் பிரகாரம், பொதுச்சேவை ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.