ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோட்டாபய பலமான போட்டியாளர்
March 18, 2019 6:13 am GMT
காலதாமதத்திற்கு இடமில்லாமல் இவ்வருடம் இறுதியில் நடைபெறவேண்டிய ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி பல ஊகங்களுக்கு காரணமாகவே இருந்துவந்தது. இந்த நிலையில் அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு மகிந்த ராஜபக்சவே காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
பிரதான வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினதும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான பொது எதிர்க்கட்சியினதுமே என்பது தெரிந்ததே.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் தன்னை பொது வேட்பாளராக களமிறக்கச் செய்வதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் செய்துவந்த நிலையில், பொதுஜன பெரமுன கட்சியினரோ மீண்டும் மைத்திரிக்கு வாய்ப்புக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமது அணியிலிருந்தே ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து வந்தனர்.
மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தில் ஆளுமையாக செயற்பட்டு, மக்களின் மனங்களை வென்றெடுக்கவில்லை என்பதும், மைத்திரிபாலவை வேட்பாளராக்கினால், ஐக்கிய தேசிய முன்னணியினரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும் என்ற அபிப்பிராயங்களே மேலோங்கியிருந்தன.
இந்த நிலையிலும் மைத்திரிபாலவை பொது வேட்பாளராக களம் இறக்கச் செய்வதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டனர். ஆனாலும் தனியாக வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பலத்தை சுதந்திரக் கட்சி தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்பதையும் சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனமாக அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினாலும் அதில் ஆகக் கூடியது 25 ஆசனங்களையாவது வெற்றிபெறுவது சிரமமான காரியமாகவே இருக்கும் என்பதையும் சுதந்திரக் கட்சியினர் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இந்த பின்னடைவையே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டார். அதாவது சுதந்திரக்கட்சியை புனரமைக்கவும், அதை வெற்றிப்பாதைக்கு வழிநடத்திச் செல்லவும், அந்தக் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பவும் அதற்கு புதிய தலைமைத்துவத்தைக் கொடுத்து, தற்போதைய ஆட்சியாளர்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்லலாம் என்று சந்திரிக்கா திட்டம் தீட்டினார்.
சந்திரிக்காவின் திட்டத்தை முறியடித்து, கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்வதும், அந்த ஒரே காரணத்தை வேட்பாளருக்கான தகமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்த மைத்திரி, சந்திரிக்காவை கட்சியிலிருந்தும், கட்சியின் தொடர்புகளிலிருந்தும் தூரப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதற்கிடையே தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளையும், தீர்மானங்களையும் கடுமையாக எதிர்ப்பதும், அவர்களை முடியுமான வழிகளில் முடக்குவதும் தனது தேர்தல் ஆயத்தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையும், அவர்களை அணுசரித்துப்போவது என்ற போர்வையில் ஆட்சியாளர்களுக்கு அடிமையாக இருக்க முடியாது என்பதும் மைத்திரியின் நிலைப்பாடாக இருந்தது.
இதற்கிடையே பொதுஜன பெரமுனவை சமாளித்து தன்னையே பொது வேட்பாளராக மகிந்த அறிவிப்பார் என்றும் அதற்காக அடுத்து நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி பெற்றுக்கொள்ளும் ஆசனப்பலத்தை பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்கி மகிந்தவை பிரதமராக ஆட்சியில் அமர்த்துவதற்கு தாம் ஆதரவு வழங்கலாம் என்ற சிந்தனையிலும் ஜனாதிபதியின் காய் நகர்த்தல்கள் அமைந்திருந்தன.
மகிந்தவும் பிடிகொடுக்காமல் மைத்திரியை பொதுவேட்பாளராக களம் இறக்குவதற்கான சமிக்ஞையை காட்டிக்கொண்டிருந்தார். அரசியல் ரீதியாக அதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஆட்சியாளர்களால் தம்மீதும், தனது சகோதரர்கள் மற்றும் பிள்ளைகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வரக்கூடிய ஆபத்திலிருந்து மைத்திரி தம்மை பாதுகாப்பார் என்ற நோக்கமே மகிந்தவுக்கு பிரதானமாக இருந்தது என்ற கருத்துக்கள் வெளியாகின.
இந்தப் பின்னணியிலேயே பெரமுன கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்குமான பொது இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகள் நிறைவடையாமல் இழுபட்டுக்கொண்டு இருந்து கொண்டிருந்தன. கடந்தவாரம் பொதுக் கூட்டணி அமைப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கும், சுதந்திரக் கட்சிக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதிவடிவம் பெறாவிட்டாலும் சில விடயங்களை இருதரப்பும் ஆழமாக கலந்துரையாடின.
அதில் மைத்திரியின் வேட்பாளருக்கான சாதக பாதகங்கள், ஐக்கிய தேசிய முன்னணியின் பலமும், பலவீனமும், மைத்திரியின் எதிர்காலம், அதற்கான உத்தரவாதம் போன்ற பலவிடயங்கள் பேசப்பட்டன. சுதந்திரக் கட்சி தனியாக செயற்படுவதாக இருந்தால், தற்போது சுதந்திரக் கட்சியுடன் இருக்கும் பலர் மைத்திரியின் பதவிக்காலத்தின் பின்னர் தமது அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கப்போகின்றது என்ற கேள்விக்கும் மைத்திரிக்காக தமது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைக்கமுடியாது என்ற தீர்மானங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவ்வாறன ஒரு சூழலில் மகிந்தவிடம் அடைக்கலம் தேடிச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருப்பதையும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இருகட்சி பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியானது எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுமென இருதரப்பும் கூறியிருந்தாலும், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையிலேயே அடுத்து அரசியலில் நடக்கப்போகும் முடிவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பதை அவர்கள் தீர்மானித்துக்கொண்டனர்.
இவற்றுக்குப் பின்னரே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சதான் என்பதை மகிந்த ராஜபக்ச தீர்மானித்தார். அதற்கான அறிவிப்பையும் தற்போது செய்துள்ளார். இதுநாள்வரை பொது எதிரணியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கப்பெற்றுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர்களுள் பலமான போட்டியாளர் என்பதை மறுக்க முடியாது. அவரை பெரும்பான்மைச் சிங்கள மக்களும், படையினரும், ஆசிரியர்கள் சமூகமும், நாட்டின் புத்திஜீவிகள் தரப்பும், ஆதரவளிப்பார்கள். இதேவேளை முஸ்லிம்களும் தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும் மலையகத் தமிழர்களின் ஆதரவும் அங்குள்ள தலைமைகளாலேயே பெற்றுத்தரப்படும் என்றும் நம்பப்படுகின்றது.
வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவாக கிடைக்காவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது. தமிழ் மக்களின் ஏனைய வாக்குகள் சிதறடிக்கப்படவோ அல்லது பிரயோகிக்கப்படவோ இல்லாமல் போகவும் வாய்ப்புகள் இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை செலுத்தாது என்று கருதப்படுகின்றது.
மற்றுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் பகைமை பாராட்டி அரசியல் இடைவெளிகளை ஏற்படுத்திக்கொண்டு பின்னோக்கி பயணிக்கும் பிற்போக்கு அரசியலை எப்போதும் செய்ததில்லை. அவர்கள் நிலைமையை ஆராய்ந்து தமது சமூகத்திற்கு எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் முன்னோக்கிப்போவது என்ற கோட்பாடுகளை சிந்தித்து கசப்பாக இருந்தாலும் அதை எதிர்காலத்திற்கான தீர்மானமாக ஏற்றுக்கொண்டு அந்த அரசியல் சூழலை கையாள்வார்கள் என்பதே கடந்தகால வரலாறாகும்.
எனவே முஸ்லிம்களின் பெரும்பான்மையான வாக்குகள் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் தீர்மானங்களுக்கு சாதகமாகவே அமையும் என்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது.
கோட்டாவுடன் பலமான போட்டியை ஏற்படுத்தக் கூடிய போட்டியாளரை நிறுத்துவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு இப்போது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஐக்கிய தேசிய முன்னணியானது சபாநாயகர் கரு ஜெயசூரியவைவே இதுவரை தனது வேட்டபாளராக தீர்மானித்துள்ளது.
கருஜெயசூரிய, கோட்டாவுடன் போட்டிபோடக்கூடிய பலமான வேட்பாளரா? என்பதே தற்போது ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாகவுள்ள ஏனைய கட்சிகளின் சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை தாம் ஆதரிக்கும் பொதுவேட்பாளர் தோல்வியடைந்தால், கோட்டபாய போன்ற வீச்சான ஒரு தலைவரை எதிர்கொள்வதென்பது எவ்வாறான காரியமாக இருக்கப்போகின்றது என்பதும், கோட்டபாய அரசியல் வழி பக்குவப்பட்டவரல்ல என்பதால் அவரது முடிவுகள் ஒரு அதிகாரிக்கு ஒப்பானதாக அமையும்.
அவ்வாறு அமைந்தால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதென்பது அரசியல் ரீதியாக பிரச்சனைகளை அணுகிப் பழக்கப்பட்டவர்களுக்கு முடியாது போகலாம் என்ற எச்சரிக்கை உணர்வும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் கவலையை அதிகரிக்கச் செய்யலாம்.
-
இலங்கையின் தேசிய நெருக்கடியில் தமிழர்களின் வகிபாகம் என்ன?
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தமிழ் மக்கள் ...
-
இலங்கை சர்வதேச சக்திகளின் போர்க்களமானால் இலங்கையர்களுக்கே பேராபத்தாகும்!
மீண்டும் அவசரகாலச் சட்டம், மீண்டும் இராணுவக் கெடுப...