நாடாளுமன்ற விவாதங்களில் ஜனாதிபதி பங்கேற்க வேண்டும்: அநுர
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நடைபெற்றுவரும் நாடாளுமன்ற விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இந்த நாடாளுமன்றில் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரொருவர் இருக்கிறார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு மிகவும் குறைந்த அளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன.
இது மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான விவகாரமாகும். ஜனாதிபதிதான் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சராவார்.
எனவே, நாடாளுமன்ற விவாதத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ள வேண்டும். எமக்கு ஜனாதிபதியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சர் இல்லாது இது தொடர்பிலான விவாதத்தை நடத்த முடியாது.
மக்களுக்கு நாட்டின் நிலைமையை வெளிப்படுத்த வேண்டுமெனில், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இந்த விவாதங்களில் ஜனாதிபதி கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.