ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
In இலங்கை December 28, 2020 3:38 am GMT 0 Comments 1379 by : Yuganthini
ஜனாஸாக்களை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி திருகோணமலை- கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள மயானத்திற்கு அருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘ஜனாஸாக்களை எரிக்காதே, அடக்கம் செய்ய அனுமதி’, ‘எங்கள் உடல்களை எரித்து ஒரு வரலாற்று தவறுகளுக்கு ஆளாகாதீர்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை அமைதி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
குறித்த மகஜரில், ‘இலங்கை நாடு பல்வேறு கலாசாரத்தையும் பண்பாடுகளையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும்.
இலங்கை முஸ்லிம்களும் இந்த நாட்டில் தமது மத சுதந்திரத்தை பூரணமாக பேணி, பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களது உடல்களை, எரியூட்டும் நடவடிக்கையினை நிறுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும்
துறைசார் நிபுணர் குழுவை மீளமைத்தல், மாற்றுக் கருத்தாளர்களின் கருத்தை தெரிவிக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும்.
சகல இன மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை எமது நாடு பின்பற்றவேண்டும். எமது நாடு சுபிட்சம் நிறைந்த நாடாக மிளிர வேண்டும்’ என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் பொதுமக்களிடம் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொலிஸார் பதாதைகள் மற்றும் கட்டப்பட்ட வெள்ளை கொடிகளை அகற்றினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.