ஜப்பானை அச்சுறுத்தும் புயல் ஒருவர் உயிரிழப்பு 49 பேர் காயம்!

ஜப்பானை தாக்கிய ‘குரோசா’ புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரினை நேற்று(வியாழக்கிழமை) சக்திவாய்ந்த புயல் தாக்கியது.
இந்த புயலுக்கு ‘குரோசா’ என பெயரிடப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த புயல் தாக்கியது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்றடித்தது. கன மழையும் பெய்தது.
பலத்த காற்று காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன.
கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களிலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பாறைகள் உருண்டு விழுந்தமை காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் புயல், மழை காரணமாக ஹிரோஷிமா மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் ஷிகோகு மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளை இணைக்கும் படகு சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஐப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.