கஷோக்கி கொலையுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பது உறுதி : சவுதி இளவரசர்

ஊடகவியலாளர் ஜமால் காஷோக்கி கொல்லப்பட்டதற்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்களென ரியாத்தில் நடைபெற்றுவரும் முதலீட்டு மாநாட்டில் பேசிய சவுதி இளவரசர் சபதம் செய்துள்ளார்.
மேலும் இக்கொலை சவுதிமக்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையான சம்பவமெனவும் எனினும் சவுதிக்கும் துருக்கிக்கு இடையேயான உறவில் எவ்வித பிளவுகளும் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லையெனவும் இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் கஷோக்கி கொல்லப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக் கொண்டதன் பின்னர் இளவரசரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட முதல் கருத்துக்கள் இவையாகும்,.
இந்தக் கொலை நியாயப்படுத்தமுடியாத ஒரு கொடூரமான குற்றம் என்றும் ஆரம்பத்திலிருந்தே துருக்கியின் விசாரணைகளுக்கு சவுதி முழு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்தச் சம்பவத்தை காரணம் காட்டி யாரேனும் துருக்கிக்கும் சவுதிக்கும் இடையிலான நல்லுறவை குலைப்பதற்கு நினைத்தால் அதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இளவரசர் கூறினார்.
நேற்று சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் இளவரசர் மொஹம்மட் பின் சல்மானும், ஜமால் கஷோக்கியின் குடும்பத்தினரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.