ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு மகத்தான நன்மை கிடைக்கும் – ராம்நாத் கோவிந்த்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அப்பகுதி மக்கள் மகத்தான நன்மையடைவார்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) சிறப்புரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய சட்டவரைபுகள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளிலும் நாடாளுமன்றம் சிறப்பாக செயற்பட வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை சிறப்பானதாகும்.
இதேவேளை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அப்பகுதி மக்கள் மகத்தான நன்மையடைவார்கள். 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை, இட ஒதுக்கீடு என்பன கிடைக்கும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.