ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்
In இலங்கை December 29, 2020 11:43 am GMT 0 Comments 1806 by : Jeyachandran Vithushan
மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறுகின்றபோது, இலங்கை விடயத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள 40.1 என்ற தீர்மானம் முடிவுக்கு வர இருக்கிறது.
அது மார்ச் மாதம் 2021ம் ஆண்டு முடிவுக்கு வருவதாக இருந்தாலும் இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களிற்கு ஒத்துழைக்க மாட்டோம் வெளியேறுகின்றோம் என அறிவித்தல் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த சூழலில் விசேடமாக மார்ச்மாதம் நடைபெறவுள்ள அமர்வில் தமிழர் தரப்பில் ஒற்றுமையான கோரிக்கையில் எதை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து இன்று கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இனிமேல் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது. ஆனாலும் இந்த மூன்று தீர்மானங்களும் எமது மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதிலே வெற்றி காணவில்லை.
ஆகையினாலே இதைவிட வீரியமான செயற்பாடு திறண் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் அனைவரிடமும் இருக்கின்றது.
எது எப்படியாக இருந்தாலும் அனைத்து தரப்பினுடைய விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு ஓர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த குழு தாமதமாகாமல் வரப்போகும் ஓரிரு நாட்களிற்குள் சந்தித்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க இருப்பதாக” அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.