ஜே.என்.யு. வன்முறை தாக்குதல்: முகமூடி அணிந்து வந்த பெண் குறித்து பொலிஸ் தகவல்
In இந்தியா January 13, 2020 3:54 am GMT 0 Comments 1717 by : Dhackshala

டெல்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் முகமூடி அணிந்து வந்த பெண், பல்கலைக்கழக மாணவி என டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 5ஆம் திகதி டெல்லி ஜே.என். பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி குற்றத் தடுப்பு பொலிஸார் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் ஒளிப்படங்களைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் பெண் ஒருவர் கையில் கட்டையுடன், முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்பெண் ஜே.என். பல்கலைக்கழக மாணவி என்பது தெரியவந்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு முன்னிலையாகும்படி அப்பெண்ணிற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருடன் சென்ற முகமூடி அணிந்த 2 இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் டெல்லி பல்கலைக்கழகத்தின் டவுல்ராம் கல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்களை பொலிஸார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தனது ஆண் நண்பர்களுடன் அப்பெண் முகமூடி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய காணொளி வைரலானது.
தாக்குதலில் ஈடுபட்ட பெண் அகில் பாரதிய வித்யார்தி பரிஷித் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறும் சிறப்பு விசாரணைக் குழுவினர், அவருக்கு அரசியல் பின்புலம் உள்ளதா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.