ஜோ பிடனின் பதவியேற்பு விழாவை பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடத்த திட்டம்!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது.
பதவியேற்பு விழாவை நடத்தவிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் விழா எளிமையாக நடைபெறவுள்ளது.
அந்த விழாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களே அழைக்கப்படுவார்கள். விழாவின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
எனவே, பதவியேற்பை நேரில் பார்ப்பதற்காக யாரும் வர வேண்டாம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜோ பிடன் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு எந்த தடையும் இல்லை என எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழு உறுதிசெய்திருந்தது.
இதனிடையே ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜி.எஸ்.ஏ நிர்வாகி எமிலி மர்ஃபி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியான ஜோ பிடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்பார் என தெரிகிறது.
பொதுவாக, ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு 2 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.