டெங்கினை கட்டுப்படுத்த மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்- யமுனாநந்தா
In இலங்கை December 21, 2020 9:06 am GMT 0 Comments 1285 by : Yuganthini

பொதுமக்களின் சில பொறுப்பற்ற செயற்பாடுகளினால் டெங்கு நுளம்பு எமது பிரதேசத்தில் பெருகும் அபாயம் காணப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்
யாழ்.மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சி.யமுனாநந்தா மேலும் கூறியுள்ளதாவது, “தற்பொழுது பெய்யும் பருவ மழையினால் எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோய் பரவல் ஏற்படும் அபாயம் உண்டு.
எனினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இம்மாதம் நோயாளி எவரும் அனுமதிக்கப்படவில்லை.
பொதுமக்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளினால், டெங்கு நுளம்பு எமது பிரதேசத்தில் பெருகலாம். குறிப்பாக மழை பெய்த பின்னர் வீதியோரங்களில் பொறுப்பற்ற வகையில் திண்மக் கழிவுகளை வீசி செல்கின்றனர்.
இது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஏனெனில் கொரோனா பரவுகின்ற காலத்தில் நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வைத்திய சேவைகளை தொடந்து நடாத்தி வருகின்றோம்
இந்நிலையில் குறைந்தளவு வளத்துடன் தொடர்ச்சியாக வைத்திய சேவையினை மேற்கொள்வதற்கு, டெங்கு நோயினை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனால் பொது மக்கள் மத்தியில் முன்கூட்டியே விழிப்புணர்வு செயற்பாட்டினை ஏற்படுத்த வேண்டும்
எனவே, சுற்றாடல் சுத்தம் மிகவும் முக்கியமானது வீடுகளில் மழைக்குப் பின்னர் சில இடங்களில் நீர் தேங்கி இருப்பின் அவற்றில் நுளம்பு குடம்பிகள் பெருகலாம். எனவே அவற்றினை இல்லாது செய்தல் அவசியமாகும்.
மேலும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் குருதிப் பரிசோதனை செய்வதன் மூலம் அதற்குரிய சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.