டேவிற் கமரனின் பாதுகாவலர் விமானக் கழிப்பறையில் துப்பாக்கியைத் தவறவிட்டார்
In இங்கிலாந்து February 5, 2020 3:06 pm GMT 0 Comments 3499 by : S.K.Guna

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிற் கமரனின் பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியை ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது.
நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்ரிஷ் எயார்வேய்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற பயணி ஒருவர் அங்கிருந்த துப்பாக்கியைக் கண்டெடுத்து விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டேவிற் கமரனுக்கு மெற்றோ பொலிற்ரன் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
துப்பாக்கியைத் தவறவிட்ட அதிகாரி உடனடியாகக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மெற்றோ பொலிற்ரன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
கமரனின் குழு தெரிவிக்கையில்; பாதுகாப்பு விடயங்களில் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
9mm Glock 17 பிஸ்ரல் என்று கருதப்படும் இந்தத் துப்பாக்கி, மெற்றோ பொலிற்ரன் பொலிஸ், சிறப்பு பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு அதிகாரியால் தவறவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கழிப்பறைக்குச் சென்றபோது தனது ஹோல்ஸ்ரரைக் கழற்றி வைத்துள்ளார் என்று கருதப்படுகிறது.
சன் பத்திரிகையின் செய்திகளின்படி, பாதுகாப்பு அதிகாரியின் ஆயுதத்துடன் டேவிற் கமரனின் கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மெற்றோ பொலிற்ரன் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியபோது; பெப்ரவரி 3 ஆம் திகதி லண்டன் நோக்கிச் சென்ற விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி செயற்பாட்டுக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாம் இந்த விடயத்தை மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாகவும் உள்ளக விசாரணை நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் பிரித்தானியாவின் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, விசேட தேவைகளின் பொருட்டு வர்த்தக விமானங்களில் ஆயுதங்களைக் கொண்டுசெல்ல பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
பட உதவி edition.cnn.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.