டோனி அளவுக்கு நாட்டுக்காக யாராலும் செயற்பட முடியாது: கபில் தேவ்
டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயற்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டோனியின் பங்களிப்பு குறித்து, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“டோனி பற்றி நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது? அவர் நாட்டுக்காக சிறந்த சேவையாற்றியுள்ளார், அவரை நாம் மதிக்க வேண்டும்.
அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார், விளையாட விரும்புவார் என்று யாருக்கும் தெரியாது, அவர் உடல் தகுதியைப் பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய விடயம் அது. ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே கூறுவேன்.
அவரை மதிக்க வேண்டும், அவரது நல்லதிர்ஷ்டத்துக்காக நாம் அவரை வாழ்த்த வேண்டும். இந்த முறையும் உலகக் கிண்ணத்தை அவர் வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன்.
இந்த இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது, ஆனால் உலகக் கிண்ணத்தை வெல்வதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. ஒரு அணியாக விளையாட வேண்டும். காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கைகொடுத்தால் நிச்சயம் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்லும்.
ரிஷப் பந்த்தா தினேஷ் கார்த்திக்கா என்று என்னைக் கேட்டால், தேர்வுக்குழுவினர் அவர்கள் வேலையைச் செய்துள்ளனர், நாம் இந்த அணியை மதிக்க வேண்டும். ரிஷப் பந்த்திற்கு பதில் கார்த்திக்கை தேர்வு செய்தால் என்ன? தேர்வுக்குழுவினர் நல்ல முடிவை எடுத்திருப்பதாக நாம் நம்புவோம்” என கூறினார்.
1983ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் அணி, கபில் தேவ் தலைமையிலேயே, முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வென்றது.
அதேபோல, 2011ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் அணிக்கு, டோனி தலைமை தாங்கி இரண்டாவது முறையாக உலகக்கிண்ணத்தை வென்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான மகேந்திர சிங் டோனி, இதுவரை 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11992 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில், 71 அரைசதங்களும், 10 சதங்களும் அடங்கும். சராசரி 50.72 ஆகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.