தடுப்பு காவலிலுள்ள உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம் முன்னெடுப்பு
In ஆசிரியர் தெரிவு February 1, 2021 7:48 am GMT 0 Comments 1542 by : Yuganthini
விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் தொடர் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
இதேவேளை கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்தினை சீர்செய்ய முற்பட்டனர். எனினும் போக்குவரத்தினை முழுமையாக சீர்செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார், போராட்டகாரர்களை வீதியிலிருந்து கரைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
மேலும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த போராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.