தனது ஓய்வு குறித்துப் பேசிய டோனி
In கிாிக்கட் April 24, 2019 6:39 pm GMT 0 Comments 2783 by : Varothayan

உலகக் கிண்ணப்போட்டிகள் தான் முக்கியம். எனவே, தேவை ஏற்படின் அதற்கு முன்பாக ஓய்வு எடுத்துக்கொள்வேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஐ.பி.எல். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேசிய அணியின் விக்கெட் காப்பாளராக தொடர்ந்தும் விளையாடி வரும் டோனிக்கு நீண்ட காலமாக முதுகு வலி இருந்து வருகிறது. ஆனால் அந்த வலி தீவிரமடையாத வகையில் அவர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதுகு வலி காரணமாக களம் டோனி இறங்கவில்லை. இந்தப் போட்டிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கியதுடன், அப்போட்டியில் சென்னை தோல்வியையும் சந்தித்திருந்தது.
போட்டியில் டோனி களமிங்காதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் டோனியின் முதுகு வலி வீரியம் அடைந்து விட்டதோ? என ரசிகர்கள் கவலையடைந்தனர்.
அதன்பிறகு பெங்களுர் அணிக்கெதிராக களம் இறங்கி 48 பந்தில் 84 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் துடுப்பெடுத்தாட டோனி களமிறங்கவில்லை. இதனால் மீண்டும் காயம் குறித்த கவலை ஏற்பட்டது.
இந்நிலையில் காயம் வீரியம் அடைந்தால் ஓய்வு எடுத்துக் கொள்வேன். உலகக்கிண்ணம் தான் முக்கியம் என்று டோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டோனி மேலும் கூறுகையில், ‘முகுது வலி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிகவும் மோசமான நிலைக்குச் செல்லவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வருவதால், அதுகுறித்து கவனம் எனது மனதில் உள்ளது.
உலகக்கிண்ணத் தொடர் தான் முக்கியம் என்பதால் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். முதுகு வலி மிகவும் மோசமானால், உறுதியாக ஓய்வு எடுத்துக் கொள்வேன்’ என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.