தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவதில் பயனில்லை- யாழ்.அரசாங்க அதிபர்
In இலங்கை December 14, 2020 11:10 am GMT 0 Comments 1520 by : Yuganthini
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது மொத்தமாக 1144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 26 தொற்றாளர்களும் மாவட்டத்தில் பரவலாக காணப்படுவதனால், ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்கி பயனில்லை என்பதனாலே உடுவில் பிரதேச முடக்கம் தளர்ப்பட்டுள்ளது.
ஆனால், மருதனார்மடம் சந்தை மற்றும் அதனோடு அருகிலுள்ள கடை தொகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.