தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – விஜயபாஸ்கர்
In இந்தியா December 7, 2020 5:10 am GMT 0 Comments 1365 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க கூடுதலாக 240 நடமாடும் குழுக்களை ஆரம்பித்து வைத்தப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ வெள்ளம் வடிந்ததற்கு பிறகும் நோய் பரவும் அபாயம் ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ அங்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்படும்.
பொதுமக்களுக்கு சீரற்ற காலநிலையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மருத்துவ குழுவினருடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. மழை காலம் என்பது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலான ஒன்று. இந்த காலத்தில் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இடங்களில் பணியாளர்களை அதிகப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.
தொடர்ந்து அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை 2-ம் கட்டத்தில் இருந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.