தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
In இந்தியா December 5, 2020 3:33 am GMT 0 Comments 1432 by : Jeyachandran Vithushan

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடா்ந்து அதே இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை நிலவியது.
இது காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்தது. மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லும்.
இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இதுதவிர, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகர் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.