தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமாயின் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும்- ஜெயசிறில்
In அம்பாறை December 5, 2020 4:54 am GMT 0 Comments 1485 by : Yuganthini
தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமாயின் அனைத்து மக்களும் உண்ணாவிரதத்தை முன்னெடுப்பர் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் நிறுத்தப்பட்டமை தொடர்பாக காரைதீவு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற, விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இனவாத அரசியல் செயற்பாட்டிற்காக கணக்காளரை இடைநிறுத்துமாறு முட்டுக்கட்டை போட்டு சில அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.
இதேவேளை இந்த அரசாங்கம், இனவாதம் கதைப்போரை ஒதுக்கி வைப்போம் என கூறிய போதிலும் இனவாதம் பேசுபோரைதான் உள்வாங்கி கொண்டிருக்கின்றது.
சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ ஆசைப்படுகின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவினை கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும்.
இத்தரமுயர்த்தலுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கல்முனை வாழ் மக்கள் 7 ஆயிரம் வாக்குகளை அள்ளி வழங்கி இருந்தனர்.
ஒரு சில அரசியல்வாதிகள் போடுகின்ற தடைகளை நிராகரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். தரமுயர்த்தப்படாவிடின் கொரோனா காலகட்டம், சுமூக நிலைக்கு வருகின்ற பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம்.
இந்த விடயத்தில் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமாயின் அனைத்து மக்களும் உண்ணாவிரதத்தை முன்னெடுப்பர். எமது மக்கள் சொந்த நிலமில்லாமல் ஒரு கணக்காளர் இல்லாமல் அபிவிருத்தி சார்ந்த முன்னெடுப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டவாறு மக்கள் வாழ்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.