தமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்
In இலங்கை January 27, 2021 8:21 am GMT 0 Comments 1737 by : Yuganthini

யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான பெயர் பலகைகளிலும் சிங்கள மொழிக்கு முதலுரிமையும் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையில் வட.கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி உள்ள போதிலும் இலங்கை அரச திணைக்களங்கள், தமிழ் மொழியின் முதன்மை தன்மையை புறக்கணித்து இரண்டாவதாக பின்தள்ளியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முற்று முழுவதுமாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களே வாழ்கின்ற ஒரு நிலை இருந்தும் அரச திணைக்களங்களின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்களையும் மக்களையும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தனி சிங்கள மாவட்டங்களில் தமிழ் மொழியை முதல் மொழியாக போட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது போடத்தான் விட்டிருப்பார்களா? இதை இந்த அரசும் அதன் அரச திணைக்களங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் மக்களின் தாய் மொழியை இரண்டாம் நிலைப்படுத்தும் சம்மந்தப்பட்ட அரச திணைக்களத்தின் இச்செயலை வன்மையாக எதிர்ப்பதுடன் கடும் கண்டனத்தையும் பேரவையினராகிய நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.
மேலும் யாழ்.மாநகர சபை இவ்விடயத்தை கவனத்திலேடுத்து சபையின் அனுமதியைப்பெற்று, சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு உரிய முறையில் தெரிவித்து, மீண்டும் தமிழ் மொழியை முதலாவதாக மாற்றிபுதிய பெயர் பலகையினை மாற்றியமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.