தமிழர்களின் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை!
In இலங்கை October 21, 2018 3:53 pm GMT 0 Comments 1547 by : Ravivarman

தமிழர்களின் தாயகப்பகுதிகளில் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் சூழல் அரசியலும் நில அபகரிப்பும் என்ற கருப்பொருளில் உரையரங்கு ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை எம்மீது தொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்று சொல்லி ஏராளமாக எமது நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது.
இந்த நிலஅபகரிப்பைத் தடுக்கத் தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுக்கு ஏற்பட்ட கதியே விரைவில் எமக்கும் ஏற்படும்.
அரசின் இந்த நிலக் கையகப்படுத்தல்கள் எல்லாம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுகின்ற பசுமை நடவடிக்கைகளாகவே உலகத்தின் கண்களுக்குத் தெரியும்.
ஆனால், அவை பச்சை முகமூடி அணிந்துகொண்டு அரசு தந்திரமாக எம் மீது தொடுத்திருக்கின்ற ஒரு பச்சை யுத்தம். இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள எமது நிலங்களை விடுவிக்கக்கோரி நாங்கள் நடத்துகின்ற போராட்டங்களின் நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளும்.
உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்த நிலங்களை அரசாங்கம் விடுவிக்கவும் நேரும். இதனால்தான் எவரும் ஆட்சேபிக்காத இயற்கைப் பாதுகாப்பு என்ற போர்வையில் இப்படி ஒரு நிலஆக்கிரமிப்பை அரசு மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.