தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்
In ஆசிரியர் தெரிவு April 25, 2019 11:07 am GMT 0 Comments 3473 by : Litharsan
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுடன் ஒப்பிடுவது தவறான விடயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து குறிப்பிடுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கிய போராட்டம். அதில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு காரணம் இருந்தது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் அகிம்சை வழியாக போராடி, தமது உரிமைகளை பெறமுடியவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது ஒரு வேறு விதமான போராட்டம்.
அடிப்படைவாதிகளுடைய போராட்டம் என்பது தங்களுடைய சில நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும், எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்பதுடன் எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. எனவே இரண்டையும் ஒருமித்து பார்க்க முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கையும், உலகத்தில் வேறு பல நாடுகளும் அடையாளம் கண்டதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சில செயல்கள் பயங்கரவாதத்தை வெளிகொணர்ந்ததாக அமைந்தன. ஆனால் அவர்களுடைய போராட்டத்திற்கு பின்னால் ஒரு அடிப்படைவாதம் இருக்கவில்லை.
ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட காரணத்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ விடப்படாத காரணத்தினாலுமே அவர்களுடைய போராட்டம் நடந்தது. ஆனபடியால், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராட்டத்திற்கும், தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி நோக்குவது தவறான நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.