ஒன்பதாவது நாளாக தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்: சிலரது உடல்நிலை பாதிப்பு
In இலங்கை September 22, 2018 6:55 am GMT 0 Comments 1754 by : Yuganthini
அனுராதபுரச் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் நீடிக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலரின் உடல்நிலைப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியல் என்ற பெயரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
அவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து, இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறிவரும் நிலையில், அவர்களது போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் நீடிக்கின்றது.
இவர்களுக்கு ஆதரவாக மெகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.